தினம் ஒரு பாசுரம் - 74
தினம் ஒரு பாசுரம் - 74
கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும், உந்தன்
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான், நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங் கொண்டலே!
- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)
கூரத்தாழ்வானின் சீடரான திருவரங்கத்து அமுதனார் எம்பெருமானாரை உகந்து அருளிய இன்னொரு பாசுரத்தை இன்று அனுபவிக்கலாம்.
பொருளுரை:
கையில் கனியென்னக் - (உள்ளங்)கையில் (நெல்லிக்)கனி எனும் அளவுக்குத் தெளிவாக.
கண்ணனைக் காட்டித் தரிலும், - கண்ணனான திருமாலை (என் முன் வரவழைத்துக்) காட்டிப் புரியவைத்தாலும்
உந்தன் மெய்யில் பிறங்கிய - உனது திருவடிவத்தில் ஒளி வீசுகின்ற
சீர் அன்றி - மேன்மை மிக்க (கல்யாண) குணங்களை அனுபவிப்பதை விடுத்து வேறொன்றும்
வேண்டிலன் யான், - நான் (உன்னிடம்) வேண்ட மாட்டேன்
நிரயத் தொய்யில் கிடக்கிலும் - நரகச் சேற்றில் உழன்றாலும்
சோதிவிண் சேரிலும் - சோதி வடிவ பரமபதத்தைச் சென்றடைந்தாலும்
இவ்வருள் நீ - இது ஒன்றை மட்டும் (அடியேனுக்கு) நீ அருள வேண்டும்
செய்யில் தரிப்பன் - (நீ அங்ஙனம்) செய்தால் (நான் மிக்க மகிழ்வோடு) அபிமானித்து நிலைத்திருப்பேன்
இராமானுச! - எம்பெருமானாரே!
என் செழுங் கொண்டலே! - (மழை நீர் தாங்கிய) செழுமையான மேகம் போன்றவரே!
கண்ணனைக் காட்டித் தரிலும் - இது வெறும் “காட்டித் தருதல்” அன்று.
கண்ணனை முன் கொணர்ந்து நிறுத்தி, “இவன் தான் பரமபத நாயகன், அன்று குருட்சேத்திரத்தில் அருச்சுனனுக்குக் கீதோபதேசம் அருளிய, யுத்த களத்தில் அவன் தேர் முன் நின்று முகத்தில் அம்புத்தழும்புகள் ஏற்ற திருவல்லிகேணி வேங்கடகிருஷ்ணன், கபிஸ்தலத்தின் ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன், திருப்பாற்கடல் கிடக்கும் மாயன், ஆண்டாள் பாடிய கிருஷ்ண சிம்மம் (மாரி மலை முழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கம்), விஷ்ணுசித்தர் குழந்தையாய்/ பாலகனாய் பாவித்து உருகிய கோகுலக் கண்ணன், நப்பின்னை வேய்ந்தோள் அணைத்த அவள் மணாளன், காஞ்சி திருப்பாடகத்தில் அமர்ந்த திருக்கோலப் பாண்டவத்தூதன், பாஞ்சாலியின் மானம் காத்த புனிதன், ஏழை சுதாமரிடம் உயர்வு/தாழ்வு நோக்கா பேரன்பைக் (சௌசீல்யம்/வாத்சல்யம்) காட்டியவன், ஒரு யானையைக் (குவலயாபீடம்) கொன்று ஒரு யானையைக் (கஜேந்திரன்) காத்த சர்வலோக ரட்சகன்” என்றெல்லாம் விளக்கிச்சொல்லி, சரணாகதியையும், திருமந்திர, த்வய, சரம ஸ்லோகங்களையும், இன்னபிற வைணவத் தத்துவங்களையும் உபதேசித்துத் தெளிவித்தலை, இதன் சாரமாக, உட்பொருளாகக் கொள்ளல் தகும்!
உந்தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான்
மேலே சொன்ன வண்ணம் “கண்ணனைக் காட்டித் தந்ததால்” அமுதனாருக்கு ஞானத் தெளிவு பிறக்காமல் இல்லை. அப்பெரும் புரிதல் கிடைத்த பின்னரும் “இராமனுஜரே, உம் மேன்மையை அனுபவிக்கும் பேறு மட்டுமே எனக்கு உவப்பானது, அது கிடைத்தால், எனக்கு நரகமும், பரமபதமும் ஒன்றே” என்று திருவரங்கத்து அமுதனார் அற்புதமாக அருளுகிறார்! என்னே அவரது ஆச்சார்ய பக்தி!
நிரயத்தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள் நீ --’நிரயம்’ நரகத்தையும், ’தொய்யில்’ சேறு அல்லது குழம்பையும் குறிக்கிறது. 1) மானுடப் பிறப்பில் சம்சார பந்தத்தில் உழல்வது, 2) தீவினைப் பயனால் அடுத்த பூவுலகப்பிறப்பின் முன் நரகத்தில் துன்புறுவது என இரண்டையும், ”நிரயத் தொய்யில் கிடக்கிலும்” குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த இரண்டுக்கும் மிக மிக மேலான/ உய்வான/ பிறப்பறுக்கும் பெரும்பேறான பரமபதம் கூட, ராமானுஜரின் அணுக்கம் இல்லாத நிலையில், தனக்கு உவப்பன்று என்று அடியவர்க்கு உணர்த்துகிறார் அமுதனார்.
செழுங்கொண்டலே - பொதுவாக குருவை (ஆச்சார்யனை) மேகத்தோடும், பசுவோடும் ஒப்பிடும் வழக்கம் உண்டு. மழை நீர் நிறைந்த செழுமையான மேகம் ஞானம் நிறைந்த குருவுக்கு உருவகம் ஆகிறது. அது போலவே “பால் தரும் பசு” ஞானம் தரும் குருவுக்கு உருவகமாகிறது.
சொற்பொருள்:
பிறங்குதல்
விளங்குதல்; உயர்தல்; சிறத்தல்; மிகுதல்; பெருகுதல்; நிலைமாறுதல்; செறிதல்; பெருத்தல்; ஒலித்தல்.
நிரயம்
நரகம் .......... நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது (புறநானூறு).
தொய்யில் அல்லது தொய்யல்:
மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு; உழுநிலம்; கீரைவகை; அழகு; கிளர்ச்சி; நீர்க்கொடிவகை.
தரித்தல்
மதித்தல், ஆதரித்தல், நிலைபெற்று நிற்றல்; இருப்புக்கொள்ளுதல்; ஊன்றி நிற்றல்; அணிதல்; தாங்குதல்; பொறுத்தல்; அடக்கிக் கொள்ளுதல்; மறவாது உள்ளத்தில் வைத்தல்; தாம்பூலம் தின்னுதல்.
கொண்டல்
கொள்ளுதல்; மேகம்; காற்று; கீழ்காற்று; கிழக்கு; மேடராசி; கொண்டற்கல்; மகளிர் விளையாட்டு வகை.
எ.கா: “கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்” - திருப்பாணாழ்வார். இங்கு கண்ணபிரானை கருநீல மேக நிறத்தவன் என்கிறார் ஆழ்வார்.
--- எ.அ.பாலா
3 மறுமொழிகள்:
*ஆச்சார்ய தேவோ பவ* என்னும் தத்துவத்துக்கு இதை விட எடுத்துக்காட்டு வேறெங்கும் இராதென்றே எண்ணுகிறேன்.
ஆஹா அருமை அருமை நாலு வரிகளில் இத்துணை விஷயங்களா ! விளக்கி கூறியமைக்கு நன்றி. தெய்வ பக்தியை விட குரு பக்தி வியக்க வைக்கிறது. அது ஒரு பொற்காலம். பிறருக்கு தீங்கு நினையாத , சுயநலமில்லாத காலம் :))
நன்றி வாழ்த்துகள் :)
வழக்கம் போல அழகான விளக்கம்.
ஒரு சிறிய கருத்து.
// உந்தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் //
கண்ணனையே உள்ளங்கையில் வைத்துக் காட்டினாலும்... இராமானுசரே... உங்களுடைய மெய் + இல் (உண்மையான உள்ளத்தில்) கூறப்பட்ட சீர்மிகுந்த மொழிகளை அன்றி வேறெதுவும் வேண்டிலன் என்று சொல்வதாகக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.
இன்னொரு விதமாகச் சொன்னால்... உண்மையோடு உரைக்கப்பட்ட உங்கள் வாய்ச்சொல் என்னும் சீரை அன்றி வேறெதுவும் வேண்டும் என்றும் பொருள் வருகிறது.
Post a Comment